வானிலை மாறுபாடு எச்சரிக்கை: தூத்துக்குடியில் தடையை மீறி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்

மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என அறிவித்தார்.அறிவிப்பு தடையை மீறி 247 விசைப்படகுகளில் தூத்துக்குடி மீனவர்கள் மீன் பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு சென்ற படகுகளை படத்தில் காணலாம்.
தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு சென்ற படகுகளை படத்தில் காணலாம்.
Published on

தூத்துக்குடி:

இந்தியாவில் கடல்வளம், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இது மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இந்த நாட்களில் விசைப்படகு மற்றும் இழுவை படகுகள் மூலம் ஆழ் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. நாட்டுப் படகு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே சென்று மீன் பிடிப்பதால் அவர்களுக்கு இந்த தடை பொருந்தாது. இதனால் அவர்கள் வழக்கம்போல் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள்.

கடந்த 60 நாட்களாக அமலில் இருந்த மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் நள்ளிரவோடு நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் தூத்துக்குடியில் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஆயத்தமாகினர்.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஜூன் 14 முதல் (நேற்று முன்தினம்) 18-ந் தேதி வரை மன்னார் வளைகுடா குமரி கடல் மற்றும் தென் தமிழக கடற்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் சுழல் காற்றானது 45 முதல் 55 கி.மீ வேகத்துடன் வீசக்கூடிய காற்று 65 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டது. 61 நாட்களாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடாமல் மிகவும் சோர்ந்து காணப்பட்ட மீனவர்கள் நேற்று மிகுந்த எதிர்பார்ப்புடன் மீண்டும் மீன்பிடிக்க புறப்பட இருந்த நிலையில் இந்த அறிவிப்பால் மேலும் சோர்வடைந்து காணப்பட்டனர். இந்த காலங்களில் நாட்டுப்படகு என்ற பெயரில் விசைபடகுகளில் சிலர் மீன்பிடிக்க சென்றதாக மீனவர்கள் புகார் கூறினர்.

இந்நிலையில் ராமநாத புரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தூத்துக்குடி மீனவர்களுக்கு கிடைத்ததை தொடர்ந்து இன்று அதிகாலை வானிலை மாற்றம் எச்சரிக்கை அறிவிப்பு தடையை மீறி 247 விசைப்படகுகளில் தூத்துக்குடி மீனவர்கள் மீன் பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com