

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரையேக் கொண்ட திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று 33வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில், தற்போது தவெக தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தவெக தலைமை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,
“நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.
அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.
எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.