

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
இதன் காரணமாக வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கும் நீர்வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று மழை சற்று ஓய்ந்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் வால்பாறையில் உள்ள அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இது வால்பாறைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது மிகவும் பிரசித்தி பெற்ற நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான சோலையார் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள பிர்லா அருவியில் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போது அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இது காண்போரின் கண்களை கவரும் வகையில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.