

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் முக்கிய நீர்ஆதாரமாக விளங்கி வருகிறது. அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அதன் பிறகு 5 மாவட்ட பாசனத்துக்கும், குடிநீருக்கும் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் கிடுகிடுவென சரிந்தது. கடந்த ஜூன் 5-ந்தேதி அணையின் நீர்மட்டம் 21.51 அடியாக இருந்தது. இதனால் அணையில் இருந்து குடிநீருக்கு கூட தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
வைகை அணையில் இருந்து மதுரை, திருமங்கலம், சேடப்பட்டி, ஆண்டிபட்டி குடிநீர் திட்டங்களுக்காக தினந்தோறும் 69 கன அடி நீர் திறக்கப்பட்டது. உறை கிணறுகளும் வற்றி விட்டதால் 40 கன அடி மட்டும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன் பிறகு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலும் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து மெதுமெதுவாய் உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 26.12 அடியாக உயர்ந்துள்ளது.
ஒரே வாரத்தில் 4 அடிக்கும் மேல் நீர்மட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணைக்கு 286 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 240 மி.கன அடியாக அதிகரித்துள்ளது.
இதே போல் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் 113.60 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து 947 கன அடி. திறப்பு 356 கன அடி. நீர்இருப்பு 1493 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32.60 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.72 அடியாகவும், சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாகவும் உள்ளது. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தபோதிலும் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பாமல் மெதுவாக உயர்ந்து வருவது விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.
பெரியாறு 13.6, தேக்கடி 4.8, கூடலூர் 2.6, போடி 4.2, பெரியகுளம் 2.5, சோத்துப்பாறை 4.8, சண்முகாநதி அணை 1.6 என ஒரே நாளில் 35 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.