

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள், மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு மாணவ,மாணவிகள் விண்ணப்பித்து வருகிறார்கள்.
கடந்த மாதம் 27-ந்தேதி ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது. எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்பில் 15 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் இன்று வரை 72 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 60 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இன்னும் பல மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இருப்பதால் இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
அதன் அடிப்படையில் விண்ணப்பிப்பதற்கு மேலும் 2 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. 25-ந்தேதி (சனிக்கிழமை) மாலை வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் லோகநாயகி தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவ ஆணையம் அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வை தொடங்கிய பிறகுதான் தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்கும்.
மாணவர்கள் விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தரவரிசை பட்டியல் வெளியிட வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்று அவர் தெரிவித்தார்.