

நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை காரணமாக தமிழகம் பாதிக்கப்படுவதாக கூறி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியிலும் தொகுதி மறுவரையறையின்போது தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப் டக் கூடாது என்று அனைத்து அரசியல் கட்சி களும் குரல் கொடுத்தன.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இதன்படி இந்த கூட்டம் இன்று நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையால் தமிழக எம்.பி. தொகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா? என்பது பற்றி நேற்று சட்டமன்றத்தில் த.வெ.க. அமைச்சர்களும் கேள்வி எழுப்பினார்கள்.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன.
தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது என்றும் தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை" என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க.வும் இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளது. அதேபோன்று பா.ம.க.வும் விஜய் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக கூறி உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று உள்ள தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல்சபை எம்.பி. வழங்கப்பட்டு உள்ளது. எல்.கே.சுதீஷ் எம்.பி.யாக இருக்கிறார். அவர் இன்று டெல்லியில் இருப்பதாகவும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அந்த கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியூரில் இருக்கிறார். அதனால் அவரும் பங்கேற்கவில்லை.
அதே நேரத்தில் த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதலமைச்சர் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு 3 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட 12 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், இந்திய கம்யூ னிஸ்டு கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் இருவரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல்சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த எம்.பி.யும் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதன் மூலம் த.வெ.க. ஆதரவு எம்.பி.க்கள் 20 பேர் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.
தமிழகத்தில் மொத்தம் மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளையும் சேர்த்து 57 பேர் உள்ளனர். இவர்களில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.
தி.மு.க.வில் 8 மேல் சபை எம்.பி.க்களும், 20 மக்களவை எம்.பி.க்களும் உள்ளனர்.
அ.தி.மு.க.வுக்கு 4 மேல்சபை எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே இன்றைய கூட்டத்தை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.