தை அமாவாசை: ஒகேனக்கல்லில் குவிந்த மக்கள் கூட்டம்

தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலை மோதியது.சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றுவிடமால் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை படத்தில் காணலாம்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை படத்தில் காணலாம்.
Published on

ஒகேனக்கல்:

தை அமாவாசை நாளில் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம். வருடத்தின் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் முக்கிய அமாவாசை நாட்களில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

இதைத்தொடர்ந்து தை அமாவாசையான இன்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முதலைப் பண்ணை பகுதியில் காவிரி கரையில் ஏராளமான பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட வற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர்.

பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.

இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என ஏராளமானவர்கள் ஒகேனக்கல்லுக்கு வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஒகேனக்கல்லில் இன்று தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலை மோதியது.

இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றுவிடமால் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து இன்றும் வினாடிக்கு 300 கனஅடியாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக மெயினருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டுகிறது.

இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் அருவியிலும், காவிரி ஆற்றில் தேங்கிய உள்ள நீரிலும் குளித்து மகிழ்ந்தனர்.

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், பஸ் நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com