தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு - இன்று முதல் அமல்

சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும், 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு - இன்று முதல் அமல்
Published on

தமிழகத்தில் 6 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள், அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணத்தை வசூலிக்க, 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும், 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கார், ஜீப் போன்ற வாகனங்களுக்கு ரூ.10-40 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கனரக வாகனங்களுக்கு ரூ.50-200 வரை கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில், 60 கிலோ மீட்டர் தொலைவில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச்சாலையில் 4 சுங்கச்சாவடிகள், வானகரம், சூரப்பட்டு, பாடியநல்லூர், மதுரை வெளிவட்டச்சாலையில் 2 சுங்கச்சாவடிகள், கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை, மாமல்லபுரத்தில் உள்ள நாவலூர் உள்ளிட்ட 17 சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கார்கள், சிறிய வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை.

மாறாக பஸ், லாரிகளுக்கு ரூ.180-லிருந்து ரூ.185-ம், 3 ஆக்சில் வாகனங்களுக்கு ரூ.190-லிருந்து ரூ.195-ம், 4 ஆக்சில் வாகனங்களுக்கு ரூ.280-லிருந்து ரூ.285-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரூ.5 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்து அல்லாத வாகனங்கள் 200 முறை பயணம் செய்ய அனுமதிக்கும் வகையில், ரூ.3 ஆயிரம் கட்டணத்தில் வருடாந்திர சுங்க அனுமதிச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், வரும் ஆண்டுகளில் சுங்க வசூல் சீரான நிலையை அடையும். அத்துடன் இன்று முதல் ரொக்கம் பெரும் முறை ரத்து செய்யப்பட்டு முற்றிலும் டிஜிட்டல் மூலமே பணம் செலுத்த வேண்டும்.

'பாஸ்ட் டிராக்' ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களுக்கு ரூ.55 கட்டணத்திற்கு பதில் ரூ.68 டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.

தமிழகத்தில் சுங்கச்சாவடி வாயிலாக 2022-23-ம் நிதியாண்டில் ரூ.3,758.23 கோடியாக வருவாய் இருந்தது. இது. 2023-24-ல் ரூ.4,157.96 கோடியாகவும், 2024-25-ல் ரூ.4,300 கோடியாகவும் அதிகரித்துள்ளது. 2025-26-ம் ஆண்டில் பிப்.28 வரை, ரூ.4,000 கோடியாக உள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வு காரணமாக சரக்கு வாகனங்களின் கட்டணம் அதிகரிப்பதோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com