

எல்லா அரசியல் கட்சிகளிலும் கோஷ்டிகள் இருக்கும். இதில் கோஷ்டி பூசலுக்கு பெயர் பெற்ற கட்சி காங்கிரஸ். இதற்கு புதிய தலைவர்கள் வரும்போது கோஷ்டி அரசியலுக்கு இடமில்லை என்பார்கள். ஆனாலும் அது இருந்து கொண்டே இருக்கும்.
தற்போது புதிய மாநில தலைவராக பொறுப்பேற்று உள்ள மாணிக்கம் தாகூரும் இனி கோஷ்டி அரசியல் இருக்காது என்று கூறி உள்ளார். மேலும் போஸ்டர்களில் படங்களை போடுவதால் பிரச்சினை வருவதால் ராகுல் படத்தை மட்டும் பெரிதாக போட வேண்டும் என்பது உள்பட சில கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மூத்த தலைவரான திருநாவுக்கரசர் ‘எல்லோரும் தங்கள் படங்களையும், தங்களுக்கு பிடித்தமான நிர்வாகிகள் படங்களையும் போட்டுக் கொள்வதில் தவறில்லை. கட்சியில் கோஷ்டி இருப்பது நல்லதுதான். அதனால்தான் கட்சியும் வளருகிறது என்று மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாமில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்று திருநாவுக்கரசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட தலைவர்கள் மத்தியில் உரையாடி இருக்கிறார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் இருக்கத்தான் செய்யும்.
யார் யாருக்கு யாரை பிடிக்கிறதோ அவர்களை போய் பார்ப்பார்கள். அவர்கள் மூலம் கல்லூரியில் ஒரு அட்மிஷன், போலீஸ் நிலைய விவகாரம், அரசு அலுவலகங்களில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என்று வேலைகள் நடக்கும். இதன் மூலம் கட்சியும் வளரும்.
யாரும் யாரையும் பார்க்க கூடாது. யாருடனும் பேசக்கூடாது. இந்த படங்களை போடக்கூடாது என்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியப்படாது.
காங்கிரசில் காந்தி காலத்திலும் கோஷ்டி இருந்து இருக்கிறது. காமராஜர் காலத்திலும் இருந்து இருக்கிறது. இது தவிர்க்க முடியாதது. அப்படி ஒவ்வொரு தலைவர்களுக்கும் ஆதரவு கூட்டம் பெருக பெருகதான் கட்சியும் வளர்ந்து இருக்கிறது.
போஸ்டர்களில் படங்கள் போடுவது பற்றி எம்.ஜி.ஆர். சொல்வார் ‘என்னை எல்லோருக்கும் தெரியும். உங்கள் படங்களையும் போட்டு அச்சிடுங்கள். அப்போதுதான் நீங்களும் மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள். உங்களை மக்கள் அறிந்து கொள்வார்கள்’ என்பார்.
நீங்களும் ராகுல் படத்தை எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் போட்டு கொள்ளுங்கள். மாநில தலைவர் படத்துடன், மாவட்ட தலைவர்கள் படம் முதல் ஒன்றிய தலைவர்கள் படங்கள் வரை போடுங்கள். அப்போதுதான் மக்கள் மத்தியிலும் நீங்கள் அறி முகம் ஆவீர்கள். அதிகாரிகள் மத்தியிலும் அறிமுகம் ஆவீர்கள்.
அவ்வாறு அறிமுகம் ஆகி இருந்தால்தான் மக்கள் பிரச்சினைகளுக்காக நீங்கள் அதிகாரிகளை சந்தித்து பேச முடியும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இப்படி மக்களுக்கு ஏதாவது செய்து கொடுத்தால்தான் மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள். கட்சியும் வளரும்.
பூத் லெவலில் இருக்கும் கடை நிலை நிர்வாகிகள் வரை கட்சியை வளர்ப்பதில் தீவிரம் காட்ட வேண்டும். இப்படி கட்டமைப்பை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அனைத்து மட்டங்களிலும் பலமாக வைத்துள்ளது. அதே போல் நீங்களும் கட்டமைப்பை பலப்படுத் துங்கள்’ என்றார்.
காங்கிரஸ் மாநில கமிட்டி கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில் திருநாவுக்கர சர் இவ்வாறு பேசியது மாவட்ட தலைவர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார்கள்.