"நாடு தன் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது"– மாணவர்களின் போராட்டத்திற்கு கமல்ஹாசன் எம்.பி ஆதரவு

போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.
Kamalhassan MP
Published on

டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு நடிகரும் ராஜ்யசபா எம்.பி.யான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

போராட்டம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இவர்களது போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.

கமல்ஹாசன் எம்.பி ஆதரவு

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு நடிகரும் ராஜ்யசபா எம்.பி.யான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஒரு குழந்தை அழுதபோதே நாம் செவிகொடுத்திருக்க வேண்டும்.

அதற்குப் பதிலாக, நம் பிள்ளைகளில் எண்ணற்றோர் இறக்கும் வரை நாம் காத்திருந்தோம்.

கற்றலுக்குப் பதிலாகப் பயிற்சியும், ஆர்வத்திற்குப் பதிலாகப் பதட்டமும், தகுதிக்குப் பதிலாகக் குற்றச்செயல்களும் இடம்பெறும் ஓர் அமைப்பு அழுகிப்போனது.

ஒரு தேசத்தின் பிள்ளைகள் பதில்களுக்குப் பதிலாகத் தடைகளையும் தடியடிகளையும் எதிர்கொள்ளும்போது, ​​அந்த தேசம் தோல்வியடைகிறது.

சோனம் வாங்சுக், இனிவரும் பயணத்திற்கு தேசத்திற்கு உங்கள் மனசாட்சி தேவைப்படும். தயவுசெய்து உங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுங்கள்.

இந்தியப் பிள்ளைகளுக்கு: நீங்கள் சிறந்தவர்கள். உங்கள் கடமையை நீங்கள் செய்துவிட்டீர்கள். இப்போது நாடு உங்களுக்காகத் தன் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. எங்கள் தோல்விகளை விட உங்கள் கனவுகள் என்றென்றும் பெரிதாக இருக்கட்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com