முத்துப்பேட்டை அருகே கோவில் திருவிழாவில் ஆபாச நடனமாடிய 3 பேர் கைது

திருவிழா அன்று இரவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்துள்ளது.கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முத்துப்பேட்டை அருகே கோவில் திருவிழாவில் ஆபாச நடனமாடிய 3 பேர் கைது
Published on

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 24-ந் தேதி திருவிழா நடந்தது. திருவிழா அன்று இரவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்துள்ளது.

இந்த ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் கலைஞர்கள் ஆபாசமாக நடனம் ஆடியதாக கோவை அம்மன் நகர் போத்தனூர் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு-புதுச்சேரி நடன கலைஞர் நலச்சங்க மாநில தலைவர் ராஜசேகரன் என்கிற அஜித் ராஜா என்பவர் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரில், கோர்ட்டு உத்தரவை மீறி சம்பந்தப்பட்ட கோவிலில் நிர்வாக கமிட்டியினரால் ஏற்பாடு செய்யப்பட்டு ஆபாச நடனம் நடந்துள்ளது. எனவே, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதனையடுத்து முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் உத்தரவின் பேரில், வழக்குபதிவு செய்த முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் திருமுருகன், ஆனந்தன், தலைமை காவலர் ஆத்மநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின்னர் கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் நடத்தியது தொடர்பாக இடும்பாவனம் கிராமத்தை சேர்ந்த கண்ணையன் (வயது 65), வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு கீழக்காடு கிராமத்தை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கோபிநாத் (31), நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்த ஆபாச நடனம் ஆடிய ரவிக்குமார் (26) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com