திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும்-அமைச்சர் அறிவிப்புக்கு சிபிஐ வரவேற்பு!

"திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மக்கள் அமைதியைத்தான் விரும்புகின்றனர்" இந்த விவகாரத்தில் மதவாத சக்திகள் அரசியல் செய்ய அரசு அனுமதிக்காது"
CPI welcomes the Minister's announcement!
Published on

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்றும் பிரச்சனைக்கு முந்தைய நடைமுறையே தொடரும் என தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைபாட்டை வரும் 22-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு 04.06.2026 அன்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் பிரச்சனையில், தமிழ்நாடு அரசு கடந்த காலத்தில் மேற்கொண்ட சரியான நிலையை இப்போதும், வரும் காலத்திலும் உறுதியோடு முன்னெடுக்க வேண்டும்.

வலதுசாரிகள் மற்றும் வலது சாரி சார்புடைய நீதியரசர்களின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் சட்ட ஒழுங்கையும், மதச்சார்பற்ற கொள்கை நிலையில், சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டியது அரசியலமைப்பு சார்ந்த கடமையாகும். இதன் அடிப்படையில் திருப்பரங்குன்றத்தில், சிக்கத்தர் தர்கா அருகில் உள்ள சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடந்த 05.06.2026 அன்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டது.

இந்நிலையில் "திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மக்கள் அமைதியைத்தான் விரும்புகின்றனர்". எனவே, இங்கு கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நிலையே தொடரும். இதுவே மக்கள் விருப்பம். இந்த விவகாரத்தில் மதவாத சக்திகள் அரசியல் செய்ய அரசு அனுமதிக்காது" என தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மதுரை அருகே செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தி இருப்பது வரவேற்பிற்குரியது.

இப்பிரச்சனையில், தமிழ்நாடு அரசு கடந்த காலத்தில் மேற்கொண்ட சரியான நிலையை உறுதியோடு தொடரவேண்டும். மதச்சார்பற்ற கொள்கையை உறுதியோடு கடைபிடிக்க வேண்டும் என  தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com