மதுபோதையில் பள்ளி மாணவியை தாக்கி தப்பியோடிய வாலிபர்- உடன் வந்த நண்பர்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி

பள்ளியில் இருந்து வந்த மாணவி ஒருவரை தாமஸ்குட்டி சரமாரி தாக்கினார்.போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய தாமஸ் குட்டியை வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுபோதையில் பள்ளி மாணவியை தாக்கி தப்பியோடிய வாலிபர்- உடன் வந்த நண்பர்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி
Published on

திருப்பூர்:

திருப்பூர் கரட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ்(வயது 22). இவரது தங்கை திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் படித்து வருகிறார். நேற்று மாலை தனது தங்கையை அழைத்து வருவதற்காக மாதேஷ் தனது நண்பர்களான வினோத்குமார்(23), தாமஸ்குட்டி(22) ஆகியோருடன் பள்ளிக்கு சென்றார். முன்னதாக, வினோத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு 3 பேரும் மது அருந்தி விட்டு சென்றுள்ளனர்.

இதனால் மதுபோதையில் 3 பேரும் பள்ளி முன்பு காத்திருந்தனர். அப்போது பள்ளியில் இருந்து வந்த மாணவி ஒருவரை தாமஸ்குட்டி சரமாரி தாக்கினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் தாமஸ் குட்டியை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர் தப்பி சென்றுவிட்டார்.

இதையடுத்து அவருடன் வந்த மாதேஷ், வினோத்குமார் ஆகிய இருவரையும் பிடித்து சரமாரி தாக்கினர். இதில் இருவருக்கும் ரத்த காயம் ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார் 2பேரையும் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தாமஸ்குட்டி, பழனியம்மாள் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி காதலிக்க மறுத்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் தாமஸ்குட்டி, மாணவியை மதுபோதையில் சரமாரி தாக்கிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய தாமஸ் குட்டியை வலைவீசி தேடி வருகின்றனர். காதலிக்க மறுத்த மாணவியை பள்ளி முன்பு வாலிபர் சரமாரி தாக்கிய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com