

மதுரை ஆண்டாள் புரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 83). ஓய்வுபெற்ற அறநிலையத் துறை அதிகாரி. இவரது மனைவி கொரோனா தொற்று காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் இவரது மகன் ஸ்வீடன் நாட்டிலும், மகள் வேலூரிலும் வசித்து வருகின்றனர்.
மதுரை ஆண்டாள் புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடராஜன் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவர் தினமும் தனக்கான 3 வேளை உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது வழக்கம்.
இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம் போல், உணவு விநியோகிக்கும் நபர் வீட்டின் வாசலில் நடராஜனுக்கு மதிய உணவை வைத்து விட்டு சென்று விட்டார். ஆனால் நடராஜன் அதை எடுக்காததால் வீட்டின் முன்பாக நீண்ட நேரம் அந்த உணவு இருந்துள்ளது. இந்த நிலையில் இரவு உணவை கொண்டு வந்த வாலிபர் மதிய உணவு அப்படியே இருப்பதை கண்டு பக்கத்து வீட்டில் விசாரித்தார். உடனே அவர்களும் பலமுறை கதவை தட்டி நடராஜனை அழைத்தனர். ஆனாலும் பதில் இல்லை.
இந்த நிலையில் ஸ்வீடன் நாட்டில் உள்ள அவரது மகனுக்கு தந்தையின் நிலை குறித்து தகவல் தெரிவித்தனர். அவரும் செல்போனில் பலமுறை அழைத்தும் பதில் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகன் அவசர அழைப்பு 101 மூலம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தனது தந்தையை உடனடியாக மீட்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அதிகாரி சுரேஷ் கண்ணன் தலைமையில் விரைந்து வந்து வீட்டின் கதவை பலமுறை தட்டினர். அப்போது எந்த பதிலும் இல்லை. இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து மீட்பு படையினர் உள்ளே சென்றனர். அங்கே கழிவறை பகுதியில் நடராஜன் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நடராஜன் நலமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மதிய உணவை எடுக்காததால் சுதாரித்து உணவு விநியோகிக்கும் வாலிபர் பக்கத்து வீட்டில் விசாரித்த காரணத்தால் நடராஜனின் உயிர் காப்பற்றப்பட்டுள்ளதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கூறுகையில், முதியவர் நடராஜனின் மகன் ஸ்வீடனில் இருந்து அவசர உதவி எண் மூலம் தனது தந்தையின் நிலை குறித்து புகார் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாங்கள் முதலில் வீட்டின் கதவை தட்டினோம்.
ஆனால் எந்த பதிலோ, சத்தமோ வரவில்லை. வீட்டில் எந்த பகுதியிலும் ஆள் நடமாட்டமும் இருப்பதாக தெரியவில்லை. இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தேடினோம். முதலில் வரவேற்பறை, படுக்கையறை மற்றும் சமையலறை உள்ளிட்ட இடங்களை சோதனையிட்ட நாங்கள், தொடர்ந்து வீட்டின் கழிப்பறைக்கு சென்று பார்த்த போது, அங்கு நடராஜன் சுயநினைவின்றி மயக்க நிலையில் கிடந்ததைக் கண்டோம். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம் என்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நடராஜன் உடல் நலம் பெற்று வீடு திரும்பினார்.