விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்த மணமக்கள்

வழிநெடுகிலும் நின்ற பொதுமக்கள் மணமக்களுக்கு ஆரவாரத்துடன் உற்சாகமாக மலர் தூவி வரவேற்றனர். மணமகன் மோகன்ராஜ் உற்சாகமாக நடனமாடி அனைவரையும் உற்சாகமூட்டி பரவசப்டுத்தினார்.
விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்த மணமக்கள்
Published on

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழி கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் மோகன்ராஜ். இவர் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், விவசாயம் மீது கொண்ட ஆர்வத்தால் பட்டயப்படிப்பு முடித்து விட்டு விவசாயம் செய்து வருகிறார்.

இவருக்கும் செந்தாமரைவிளை பகுதியை சேர்ந்த மாசான முத்து மகள் கலையரசிக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடைபெற்றது. இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடவும், பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டி மூலம் நிலத்தை உழுதிட வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மோகன்ராஜ் தனது திருமணத்திற்கு பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சென்று திருமணம் செய்து கொண்டார்.

இதனைத்தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு மணமகள் வீட்டில் இருந்து மணமகன் வீட்டிற்கு மாட்டுவண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தார். ஊர்வலத்தில் செண்டை மேளத்துடன், உற்சாகமாக ஆட்டம், பாட்டத்துடன் காயாமொழியில் உள்ள மணமகன் வீட்டிற்கு வந்தனர்.

அப்போது வழிநெடுகிலும் நின்ற பொதுமக்கள் மணமக்களுக்கு ஆரவாரத்துடன் உற்சாகமாக மலர் தூவி வரவேற்றனர். மணமக்கள் மாட்டுவண்டியில் வந்து இறங்கியதும் மணமகன் வீட்டார் மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது மணமகன் மோகன்ராஜ் உற்சாகமாக நடனமாடி அனைவரையும் உற்சாகமூட்டி பரவசப்டுத்தினார். மேலும் மக்கள் விவசாயத்திற்கு எந்திரங்களை பயன்படுத்துவதால் பாரம்பரிய விவசாயங்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவதாகவும், விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்ட கால்நடைகளும் அழிந்து வருவதாகவும் கூறிய மணமகன் காளை மாடுகளை விவசாய உழவுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்ததாக தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com