தவெக எம்.எல்.ஏ.க்கள் ஜனநாயகன் படம் பார்ப்பதில்தான் தீவிரமாக இருக்கிறார்கள்: நயினார் நாகேந்திரன்

தூத்துக்குடியில் உயிரிழந்த அருணாச்சலத்தின் தாயாரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்தார்.
BJP’s Nainar Nagendran slams TN police after lockup death
Published on

மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக அருணாச்சலம் கைது:

தூத்துக்குடியில் அமுதா நகரை சேர்ந்த 24 வயதான அருணாச்சலம், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக தூத்துக்குடி தெற்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரிடமிருந்த 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த அவரை, நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த அருணாச்சலத்தின் தாயாரை இன்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

தூத்துக்குடி தெற்கு காவல்துறையால் கைது செய்யப்பட்ட அருணாச்சலம், அரசு மருத்துவமனையில் இருப்பதாக அவரின் தாயாரிடம் காவல்துறை கூறியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த அவருக்கு, முதுகு தண்டுவடத்தில் பலமாக அடிபட்டு ரத்த காயம் இருந்துள்ளது. அதன்பிறகு அவருக்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக உயிரிழந்தார்.

அவரை வைத்துதான் இந்த குடும்பம் வாழ்ந்து வந்துள்ளது. அந்த மாதிரியான ஒரு நபரை, காவல்துறை அத்துமீறி வீட்டில் இருந்து இழுத்து கொண்டு போய், அடித்து கொலை செய்திருக்கிறார்கள்.

இதற்கு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குடும்பத்திற்கு கண்டிப்பாக ஒரு இழப்பீடு வழங்க வேண்டும். இது தொடர்ந்து நடைபெற்று கொண்டு வந்திருக்க்கிறது.

சமீபத்தில் நாகர்கோவிலில் சபரிவர்மன் என்பவரை சிறையில் அடித்ததால் அவர் இறந்தார். இது இரண்டாவது சம்பவம் அல்ல, தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

இதே தெற்கு காவல் நிலையத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு பெண் உயிரிழந்தார், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த பெண் காவல் நிலையத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார், அதற்கான பிரேத பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த சம்பவமும் அதே தெற்கு காவல் நிலையத்தில் தான் நிகழ்ந்துள்ளது.

காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டிருக்கிறார்கள். மனிதாபிமானம் இல்லாமல் காவல்துறையினர், பெற்ற தாயின் கண்முன்னே மகன் சாகும் அளவிற்கு தடியடி நடத்தியுள்ளனர்.

தூத்துக்குடியில் முன்னாள் சட்டமன்ற உறுபினர் மார்க்கண்டேயனை கைது செய்யும்போதும், காவல்துறையினர் நாக்கை துருத்தி கொண்டு, ஊடகவியலாளரை மிரட்டும் காட்சிகள் வெளியாகின.

காவல்துறையை கையில் வைத்திருக்கக்கூடிய தமிழகத்தின் முதல்வர் ஜோசப் விஜய் இதைப்பற்றி வாய்திறக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகன் படம் பார்ப்பதில் தான் தீவிரமாக இருக்கிறார்கள்.

வாக்களித்த மக்களுக்கு தங்களது உரிமைகளை பெற்றுத் தருவதில் அக்கறை செலுத்தவில்லை. இதை பொதுமக்களும்பார்த்து கொண்டுருக்கிறார்கள். இந்த அரசிற்கு கடுமையான கண்டனத்தையும், எச்சரிக்கையையும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நான் தெரிவிக்கிறேன்.

இதேபோன்று சாத்தான்குளத்தில் இரண்டு பேர் அடித்து கொலை செய்யப்பட்டார்கள். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள், அதன் பிறகு ஆட்சி மாறியது. அதுபோல சிவகங்கை சம்பவத்தில் நிகழ்ந்த லாக்அப் மரணத்திற்கு பிறகு, ஆட்சி மாறியது.

ஆனால் தற்போது இந்தமாதிரியான சம்பவங்கள் ஆட்சியின் தொடக்கத்திலேயே ஆரம்பித்துள்ளன. கடந்த ஆட்சிகளுக்கும், இந்த ஆட்சிக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com