

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் டாஸ்மாக்கில் ரூ.3600 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
தமிழகத்தின் எந்த எல்லை வழியாகவும் போதைப்பொருள் வரக்கூடாது. அதை முழுக்க முழுக்க தடுப்போம் என்று உணர்த்தும் வகையில் இந்த சங்கிலியை உடைத்துள்ளோம்.
அதே மாதிரி நம் எல்லைக்குட்பட்ட சங்கிலிகளையும் அதன் வழியாக வரும் சங்கிலிகளையும் விரைவில் உடைப்போம்.
மதுவிலக்கு- ஆயத்தீர்வை துறை பற்றி முன்னாள் அமைச்சர் கூறியிருந்தார். நான் விளக்கம் மட்டுமே கூறி வருகிறேன் என்று. நாங்கள் நிதானமாக அனைத்து விஷயங்களையும் தெரிந்துக்கொண்டு செயலை வெளிப்படுத்தும் ஆட்கள்.
எடுத்தவுடன், தாம் தூம் என்று இதை செய்துவிடுவேன்.. அதை செய்துவிடுவேன்.. வானத்தில் இருந்து குதித்துவிடுவேன் என்று சொல்லக்கூடிய ஆட்கள் இல்லை.
5.6.2026 அன்று முதல் செய்திருக்கின்ற புரட்சி மிகப்பெரியது. இவ்வளவு வருடங்களாக மொத்த விற்பனையாளர்களில் இருந்து வருடத்திற்கு சுமார் 88 லட்சம் கேஸ்கள் வாங்கிக்கொண்டிருந்தனர்.
இதற்கு, ஒவ்வொரு கேசுக்கும் அதாவது ஒரு கேசுக்கு 90ரூ, பீருக்கு ரூ.40, வைனிற்கு 20ரூ வீதம் ஆயிரம் கணக்கான கோடிகள் தனிநபர்கள் கைகளிலும், தனிக்கட்சி கைகளிலும், தனி அவர்களின் குடும்பத்தினரிடம் சிக்கி இருந்த பணம் நேற்று அரசாணை வெளியான நிலையில் இனி அரசு கஜானாவிற்கு தான் வரவேண்டும்.
அந்த பணம் தமிழ்நாட்டு மக்களுக்கு தான் பயன்படனும் என்று தளபதி சொல்லியிருக்கார். எந்த கட்சியுமே இந்த மாதரி ஒரு விஷயத்தை தமிழ்நாட்டில் செய்ததில்லை.
மாதத்திற்கு ரூ.100 கோடி தனி நபர்களின் கைகளுக்கு சென்றுக்கொண்டிருந்தது. என்ன செய்துவிட்டீர்கள் ஆட்சி மாற்றம் செய்து என்று கேட்கிறார்கள். மாதம் ரூ.1,200 கோடியை அரசு கஜானாவிற்கு கொண்டு வந்திருக்கோம்.
ஒரு நாளைக்கு ஒரு கோடி மதுபானம் விற்பனையாகும். அப்போது, ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 என்றால், ஒரு கோடி பாட்டிலுக்கு ரூ.10 கோடி ஊழல். இதுவே, ஒரு மாதத்திற்கு ரூ.300 கோடி, ஆண்டுக்கு ரூ.3600 கோடி ஊழல் நடந்துள்ளது.
இந்த துறை எதற்கு ஆரம்பிக்கப்பட்டதோ அதற்கான வேலையை செய்துக் கொண்டிருக்கிறோம். அதன் வெளிப்பாடுதான் இன்றைக்கு உங்கள் கைக்கு சென்ற பணங்களை அரசு கஜானாவிற்கு கொண்டு வந்திருக்கிறோம். இதுபோன்ற பல விஷயங்களை கொண்டு வருவோம்.
டாஸ்மாக்கில் மதுபானங்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கமாட்டோம். டாஸ்மாக் மட்டுமல்ல, எந்த துறையிலும் ஊழல் இருக்காது.
யார் தப்பு செய்திருந்தாலும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தப்பு தான். அது யாராக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். நான் தப்பு செய்தாலும் பாரபட்சமின்றி முதலமைச்சர் என் மீது நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.