

கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம், பள்ளம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவருக்கும், கடலூர் பகுதியை சேர்ந்த முருகவேல் (வயது 30) என்ற வாலிபருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதை பயன்படுத்தி பள்ளத்தை சேர்ந்த அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வாலிபர் முருகவேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஊருக்கு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து 16 வயது இளம்பெண்ணின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என்றும் அவரை கடத்திச் சென்றிருக்கலாம் என்றும் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரில் தனது மகள் காணாமல் போகும்போது வீட்டில் இருந்த 28 பவுன் நகை மற்றும் ரூ 50 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளதாக கூறியுள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட 16 வயது இளம் பெண்ணை தேடி வந்தனர். இந்த நிலையில் கடலூர் பகுதியை சேர்ந்த முருகவேல் என்பவர் அந்தப்பெண்ணை முகநூல் மூலம் காதலித்து கடத்தி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடலூருக்கு விரைந்து சென்றனர். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்த முருகவேலையும் அவர் கடத்திச் சென்ற அந்த 16 வயது இளம்பெண்ணையும் போலீசார் மீட்டனர்.
பின்னர் அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அந்த இளம்பெண்ணையும்அந்த வாலிபரையும் போலீசார் கன்னியாகுமரிக்கு அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர். இங்கு வந்த பிறகு வாலிபர் இதுபோல வேறு யாரையாவது ஏமாற்றி உள்ளாரா? என்றும் விசாரணை நடத்துகிறார்கள்.