

திருப்பூர்:
திருப்பூர் தாராபுரம் ரோடு புதூர் நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இன்று காலை கால்வாய்க்குள் ரத்தம் படிந்திருந்த நிலையில் சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன் உடனே இது குறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் சென்று பார்வையிட்டனர். சூட்கேசை திறந்து பார்த்த போது அதற்குள் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் உடல் இருந்தது. அவரது கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது. இதனால் அந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணை கொன்ற மர்மநபர்கள் உடலை சூட்கேசில் அடைத்து வைத்து கால்வாயில் வீசி சென்றுள்ளனர்.
அந்த இளம்பெண் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவரா? என்பதை அறிய மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போன இளம்பெண் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அருகில் உள்ள ஈரோடு, கோவை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களுக்கும் இளம்பெண்ணின் புகைப்படம் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை முடிவில் இதற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
இளம்பெண் பிணமாக கிடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில பெண்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். எனவே வடமாநிலத்தை சேர்ந்த பெண்ணாக இருக்கலாமா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெளியூரில் இளம்பெண்ணை கொலை செய்த கும்பல் திருப்பூரில் உடலை வீசி சென்றிருக்கலாமா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு மற்றும் உயர் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்து கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.