

நங்கவள்ளி:
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள விருதாசம்பட்டி கருப்புக்கவுண்டர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). நெசவு தொழிலாளி. இவரது மகன் வீரமணி (28). இவர், கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விருதாசம்பட்டி பகுதியை சேர்ந்த மாலதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
இதனிடையே ஊரில் தொடர்ச்சியாக வேலை இல்லாததால் பிழைப்பு தேடி வீரமணி தனது குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதிக்கு இடம் பெயர்ந்தார். அங்கு வீடு வாடகைக்கு எடுத்து வீரமணி தினமும் வேலைக்கு சென்று வந்தார்.
அப்போது வீட்டில் மாலதி சமையல் வேலை உள்பட அன்றாட வேலைகளை கவனித்து வந்தார். வீரமணியின் தந்தை ராஜேந்திரன் நெசவு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதற்கிடையே ராஜேந்திரனுக்கு மாலதி மீது ஆசை ஏற்பட்டது. அவரை அடைய துடித்தார். தனது மோக பார்வையை மருமகள் மீது வீசினார். தொடர்ந்து மாலதியை சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாலதி, தன்னிடம் இதுபோல் நடந்து கொண்டால் கணவரிடம் சொல்லி விடுவேன் என எச்சரித்தார். ஆனால் ராஜேந்திரன் கேட்கவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி அவர் தனது மகன் வீட்டில் இல்லாத நேரங்களில் மாலதியிடம் தொடர்ந்து தவறாக நடக்க முயன்றார்.
இந்த விஷயத்தை மாலதி தனது கணவரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார். தந்தையின் செயலை கண்டு மனவேதனை அடைந்த வீரமணி, இனிமேல் நாம் இங்கு இருக்க வேண்டாம், இருவரும் சொந்த ஊருக்கு சென்று விடுவோம் என கூறி, இருவரும் 3 மாதங்களுக்கு முன்பு ராஜேந்திரனை திருச்செங்கோட்டில் விட்டு விட்டு விருதாசம்பட்டிக்கு வந்தனர்.
ஆனால் ராஜேந்திரன் அங்கு வந்து, வீரமணியிடம் உனது மனைவி நடத்தை சரியில்லாதவள், அவளை வச்சி குடும்பம் நடத்துகிறாய், அவளை விட்டு விடு என தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வீரமணி, ராஜேந்திரனை திட்டி அங்கிருந்து அனுப்பி வைத்தார். இருப்பினும் ராஜேந்திரன், மாலதி பற்றி ஊரில் தவறாக பேசி புரளியை கிளப்பி விட்டார். இது வீரமணிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு ராஜேந்திரன் வீரமணியிடம் மாலதி பற்றி தவறாக பேசினார். அப்போது அவர், எனது மனைவியை பற்றி அவதூறாக பேசாதே?, உனது தொந்தரவு தாங்க முடியாமல் தானே இங்கு வந்தோம். ஆனால் நீ, இங்கு வந்தும் அவமானப்படுத்துகிறாய், குடும்ப கவுரவத்தை காற்றில் பறக்க விட்டு விட்டாய், எங்களை வாழ விடு, நீ திருச்செங்கோட்டுக்கு போயி விடு என கூறி என சத்தம் போட்டார்.
இதையடுத்து திரும்பி சென்ற ராஜேந்திரன், இரவு 9 மணிக்கு மீண்டும் அங்கு வந்து வீரமணியிடம் தகராறு செய்தார். பிரச்சினை பெரியதாகி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது வீரமணியை ராஜேந்திரன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வீரமணி, வீடு கட்ட வைத்திருந்த பெரிய சிமெண்ட் கல்லை தூக்கி ராஜேந்திரன் காலில் போட்டார். இதில் அவர் கீழே சுருண்டு விழுந்தார். இதையடுத்து இடுப்பு பகுதி, நெஞ்சு பகுதியில் கல்லை தூக்கி போட்டு சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி போலீசார், வழக்கு பதிந்து , வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.