கமுதி அருகே காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய் வெட்டிக்கொலை- பெண்ணின் தந்தை கைது

மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் தந்தை காதலனின் தாயை கோபத்தில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை
கொலை
Published on

கமுதி:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பள்ளப்பச்சேரி என்ற கிழக்கு அபிராமத்தை சேர்ந்தவர் ராக்கு (வயது 55). இவரது மகன் வினித்குமார் (25).

இவரும், பக்கத்து வீட்டை சேர்ந்த கண்ணாயிரம் மகள் காவ்யாவும் (21) காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அதன்படி சில நாட்களுக்கு முன்பு காவ்யா வீட்டிலிருந்து வெளியேறி வினித்குமாருடன் சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவ்யாவின் தந்தை கண்ணாயிரம் மகளை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் பலனில்லை. பின்னர் இதுகுறித்து அவர் அபிராமம் போலீசில் புகார் செய்திருந்தார்.

வீட்டை விட்டு வெளியேறிய காவ்யா ராமநாதபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் வினோத்குமாரை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இந்த தகவல் கண்ணாயிரத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.நேற்று இரவு ராக்கு வீட்டுக்கு சென்று கண்ணாயிரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஆத்திரம் அடைந்த அவர் தான் கொண்டு சென்ற அரிவாளால் ராக்குவை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கமுதி டி.எஸ்.பி. மணிகண்டன் உத்தரவின் பேரில் அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று ராக்கு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான கண்ணாயிரத்தை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com