குடிபோதையில் தகராறு- தூங்கிய கணவர் மீது கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றிய மனைவி

குடிபோதையில் தூங்கிய கணவர் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெந்நீர்
வெந்நீர்
Published on

குனியமுத்தூர்:

கோவை போத்தனூர் அருகே உள்ள நாகராஜபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 48). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி (38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

தினசரி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும் சுரேஷ்குமார் மது குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

சம்பவத்தன்று சுந்தரி வேலைக்கு சென்று இருந்தார். அப்போது குடிபோதையில் சுரேஷ்குமார் வீட்டிற்கு சென்றார்.

அவர் வீட்டில் கட்டில் மற்றும் அலமாரில் இருந்த பழைய துணிகளை எடுத்து வெளியே உள்ள குப்பைத்தொட்டியில் வீசினார். பின்னர் அறையில் சென்று தூங்கினார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சுந்தரி துணிகள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் தனது கணவரிடம் கேட்டார். ஆனால் அவர் பதில் ஏதும் அளிக்காமல் மவுனமாக இருந்தார். இதில் தனது கணவர் மீது சுந்தரிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கியாஸ் அடுப்பில் கொதிக்க வைத்து இருந்த வெந்நீரை எடுத்து வந்து தூங்கி கொண்டு இருந்த தனது கணவர் மீது ஊற்றினார். இதில் வலி தாங்க முடியாமல் சுரேஷ்குமார் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார். இதில் உடலில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து சுரேஷ்குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் குடிபோதையில் தூங்கிய கணவர் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய சுந்தரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com