

விருதுநகர்:
விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த 22 வயது இளம்பெண் 8 பேர் தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் புகார் செய்தார்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் விருதுநகர் மேலரதவீதியை சேர்ந்த ஹரிஹரன் (வயது 27), பர்மா காலனி சேர்ந்த ஜூனத்அகமது(27), ரோசல்பட்டியை சேர்ந்த பிரவீன் (26), மாடசாமி (37)மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் உள்பட 8 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஹரிஹரன், ஜூனத் அகமது, பிரவீன், மாடசாமி ஆகிய 4 பேர் மதுரை மத்திய சிறையிலும், பள்ளி மாணவர் 4 பேரும் மதுரை கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது.
இதைத்தொடர்ந்து விருதுநகர் சிறார் குற்ற நீதி விசாரணைக்குழும நீதிபதி மருதுபாண்டி 4 மாணவர்களையும் ஜாமீனில் விடுதலை செய்தார்.
இந்த நிலையில் விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 400 பக்க குற்றப்பத்திரிகையை நேற்று தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்தனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி அர்ச்சனா நேற்று மாலை கூறும்போது, தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று குற்றபத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை. ஆனால் வருகிற 23-ந் தேதி உறுதியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றார்.
எனவே கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகை மூலம் பலவேறு தகவல்கள் வெளியாகும் என கருதப்படுகிறது.