

மதுரை:
விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் சிறுவர்கள் என்பதால், அவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
மற்ற 4 பேரான ஹரிகரன், ஜீனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். விருதுநகர் பாண்டியன் நகர் போலீசார் பதிந்திருந்த இந்த வழக்கு முதலமைச்சர் உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா, சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு வினோதினியிடம் ஒப்படைத்தார். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது விசாரணையை தொடங்கினர்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண் சமூக நலத்துறை கண்காணிப்பு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி நேற்று நேரில் விசாரணை நடத்தினார்.
மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர். இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். கோர்ட்டு அனுமதி வழங்கியதும் 4 பேரிடமும் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிகரன், ஜீனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் 4 பேரும் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.