கூட்டணி தர்மத்தை மீறிய தி.மு.க.வினர்- மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு பணிவார்களா?

கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பதவியை கைப்பற்றியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
திமுக
திமுக
Published on

திருச்சி:

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளை முழுமையாகவும் மற்றும் 132 நகராட்சிகள், 436 பேரூராட்சிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. பின்னர் கடந்த 2-ந்தேதி புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து மாநகராட்சி மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர்களை தேர்ந்தெடுக்க நேற்று தமிழகம் முழுவதும் மறைமுக தேர்தல் நடந்தது.

முன்னதாக தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒரு மேயர், துணை மேயர் உள்ளிட்ட பதவி இடங்களை பகிர்ந்து ஒதுக்கியது. இந்த நிலையில் மறைமுக தேர்தலில் சில நகராட்சிகள், பேரூராட்சிகளில் தி.மு.க. தலைமையின் அறிவிப்பையும் மீறி அக்கட்சியின் கவுன்சிலர்கள்கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளை தட்டிபறித்தனர். இது தி.மு.க. கூட்டணிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி இருந்தது. இதையடுத்து தலைவர் பதவி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. பின்னர் அக்கட்சி சார்பில் கலா ராணி வேட்பு மனுதாக்கல் செய்ய தயாரானார். ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் புவனேஸ்வரிக்கு ஆதரவாக அககட்சியினர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

பின்னர் கலாராணி ஏமாற்றத்துடன் வெளியேறினார். அவர் கூறும்போது,

கூட்டணியில் எனக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. ஆனால் தலைவர் பதவிக்கு எனக்கு முன்மொழிய கவுன்சிலர்கள் இல்லை. மரபுகளை மீறி தி.மு.க.வினர் புவனேஸ்வரியை முன்மொழிந்து தலைவராக தேர்வு செய்து விட்டனர் என்றார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சியில் 11-வது வார்டில் வென்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர் முத்தமிழ் செல்வியை துணை தலைவர் வேட்பாளராக தி.மு.க. தலைமை முன்மொழிந்தது.

ஆனால் திடீர் திருப்பமாக தி.மு.க. உறுப்பினர் தமிழ்ச்செல்வன் வேட்பு மனுதாக்கல் செய்தார். இருவருக்கும் இடையே வாக்குப்பதிவு நடந்தது. இதில் தமிழ்செல்வன் வென்றார்.

இதுபோன்று மாநிலத்தின் பல பகுதிகளில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தி.மு.க.வினர் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் க.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் தங்களின் எதிர்ப்பைவெளிப்படையாக பதிவு செய்தனர்.

இதைதொடர்ந்து தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனே தங்கள் பொறுப்பைவிட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளார். மேலும் மாவட்ட செயலாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட கேட்டுக்கொண்டார்.

அதன்படி கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பதவியை கைப்பற்றியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உள்ளாட்சி பதவிக்காக கட்சி பதவிகளை இழக்கப்போகிறார்களா? அல்லது பதவியை ராஜினாமா செய்யப்போகிறார்களா? என இன்னும் சில தினங்களில் தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com