மின் தடையால் கதவை திறந்து வைத்து தூக்கம்- ராணுவ வீரர் மனைவியிடம் 12 பவுன் தாலி செயின் பறிப்பு

திருச்சி அருகே ராணுவ வீரரின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
தாலி செயின் பறிப்பு
தாலி செயின் பறிப்பு
Published on

தா.பேட்டை:

திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த ஜெம்புநாதபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பேரூர் கிராமத்தில் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் நீல மேகம். இவர் காஷ்மீர் பகுதி சி.ஆர்.பி.எப். படை பிரிவில் ராணுவ வீரராக பணி புரிந்து வருகிறார்.

இவரது மனைவி கலைவாணி (வயது 29). இவர் தனது மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் இரவில் மின் தடை ஏற்பட்டது. மின்சாரம் இல்லாததால் காற்றோட்டத்திற்காக வீட்டின் கதவை திறந்து வைத்து கலைவாணி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அங்கு வந்தார். திடீரென்று காம்பவுண்டு சுவரை ஏறிக்குதித்த அவர் சுற்றுமுற்றும் நோட்டமிட்டார். பின்னர் யாரும் இல்லாததை அறிந்த அந்த ஆசாமி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கலைவாணி அருகில் சென்றார்.

பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 12 பவுன் தங்க நகை, தாலிக்கொடியை பறித்தார். அப்போது தூக்கம் கலைந்த கலைவாணி கொள்ளையனிடம் இருந்து நகையை காப்பாற்ற போராடினார். ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை.

இதில் கலைவாணியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் கொள்ளையன் நகையுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். காயம் அடைந்த கலைவாணி அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அதன் பின்னரே வந்தனர். இதையடுத்து அவரை முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சம்பவம் குறித்து தா. பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து ராணுவ வீரரின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com