திருச்சியில் கார் மோதி போக்குவரத்து போலீஸ்காரர் பலி

மாணவன் அகிலன், மதன் பிரசாத் ஆகியோரும் காயமடைந்தனர். மாணவனுக்கு உதவ சென்று விபத்தில் சிக்கி போக்குவரத்து போலீஸ்காரர் இறந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் கார் மோதி போக்குவரத்து போலீஸ்காரர் பலி
Published on

திருச்சி:

திருச்சி மணிகண்டம் தீரன் நகரை சேர்ந்தவர் அகிலன் (வயது 20) . இவர் திருச்சியில் உள்ள ஒரு இனஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அகிலன் மற்றும் அவரது நண்பர் மதன் பிரசாத் (19) இருவரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி மன்னார்புரத்தில் இருந்து பி.என்.டி.காலனி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அரிஸ்டோ பாலம் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் மாட்டி வைத்திருந்த ஹெல்மெட் கீழே விழுந்தது. இதனை பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த திருச்சி நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த போக்குவரத்து காவலா் ஸ்ரீதர் (45) பார்த்தார்.

உடனே தனது மோட்டார் சைக்கிளை அப்பகுதியில் நிறுத்திவிட்டு ஹெல்மெட்டை எடுத்தார். அதற்குள் அந்த வாலிபர்களும் மோட்டார் சைக்கிளை திருப்பிக் கொண்டு அந்த பகுதிக்கு வந்து விட்டனர்.

இந்த கண்ணிமைக்கும் நேரத்தில் மன்னார்புரத்தில் இருந்து வந்த ஒரு கார் வேகமாக அகிலன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் ஸ்ரீதர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் மாணவன் அகிலன், மதன் பிரசாத் ஆகியோரும் காயமடைந்தனர். பின்னர் மூன்று பேரும் மீட்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை காவலர் ஸ்ரீதர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவனுக்கு உதவ சென்று விபத்தில் சிக்கி போக்குவரத்து போலீஸ்காரர் இறந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com