குன்னூர் அருகே மீண்டும் விபத்து: மலைப்பாதையில் 25 பயணிகளுடன் கவிழ்ந்த சுற்றுலா பஸ்

விபத்து காரணமாக சாலையில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மாவட்ட கலெக்டர் அருணா சம்பவ இடத்தை பார்வையிட்டு விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மலைப்பாதையில் ரோட்டை விட்டு விலகி ஓடிய பஸ், மரத்தின் மீது மோதி நின்ற காட்சி.
மலைப்பாதையில் ரோட்டை விட்டு விலகி ஓடிய பஸ், மரத்தின் மீது மோதி நின்ற காட்சி.
Published on

அருவங்காடு:

தொடர் விடுமுறையையொட்டி தற்போது ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். ராமேஸ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 25 பேர் தனியார் பஸ்சில் ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்தனர். ஊட்டியில் பல்வேறு இடங்களை பாரவையிட்ட அவர்கள் நேற்றுமுன்தினம் ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர்.

அதன்படி இரவு ஊட்டியில் இருந்து அவர்கள் பஸ்சில் புறப்பட்டனர். பஸ்சை டிரைவர் ராஜா என்பவர் ஓட்டினார். குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அந்த பஸ் வந்து கொண்டு இருந்தது. பர்லியார் 12-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பஸ்சில் திடீரென பிரேக் பிடிக்காமல் போனது. இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டை விட்டு விலகி பள்ளத்தை நோக்கி ஓடியது. பள்ளத்தில் இருந்த பெரிய மரத்தில் பஸ் மோதி நின்றது. அந்த இடத்தில் மரம் இருந்ததால் பஸ்சை தாங்கி பிடித்துக்கொண்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் பஸ்சில் சிக்கி தவித்தவர்களை பத்திரமாக மீட்டனர். யூனுஸ்கான் என்ற 13 வயது சிறுவன் பஸ்சின் கதவில் சிக்கி தவித்தான். அவனையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அந்த சிறுவன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். சிறுவன் யூனுஸ்கான் கோவை அரசு மருத்துவமனைக்கும், இரண்டு பெண்கள் உட்பட நான்கு சுற்றுலாப் பயணிகள் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மீதம் இருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான பஸ் உடனடியாக மீட்கப்பட்டது. விபத்து காரணமாக அந்த சாலையில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மாவட்ட கலெக்டர் அருணா சம்பவ இடத்தை பார்வையிட்டு விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் கொண்டை ஊசி வளைவுகளில் கல்லட்டி மலை பாதையில் போடப்பட்டுள்ள ரப்பர் தடுப்புகள் போன்று இந்தச் சாலையிலும் அமைக்கப்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். குன்னூர் டி.எஸ்.பி. குமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தற்போது விபத்து நடந்துள்ள இடம் அருகே தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து வந்த சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். அந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் அதன் அருகே மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com