திருப்பரங்குன்றத்தில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை- அமைச்சர் தகவல்

திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தவரையில் இத்துறை மூலம் செயல்படுத்தப்படும் சுயவேலை வாய்ப்பு திட்டங்களின் கீழ் கடந்த நிதி ஆண்டில் 34 நிறுவனங்களுக்கு, ஒரு கோடியே 36 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு தொழில் தொடங்க உள்ளதாகவும் கூறினார்.
அமைச்சர் தாமோ அன்பரசன்
அமைச்சர் தாமோ அன்பரசன்
Published on

சென்னை:

நறுமணப் பூக்களை பயன்படுத்தி வாசனை திரவிய தொழிற்சாலை தொடங்கமுன்வரும் தனியார் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கி தொழில் தொடங்க அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், திருப்பரங்குன்றம் தொகுதி வளையங்குளத்தில் வாசனை திரவியத் தொழிற்சாலை அமைக்கவும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தமிழ்நாடு அரசு புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு மானியத்துடன் கூடிய சுய வேலைவாய்ப்பு கடன் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தவரையில் இத்துறை மூலம் செயல்படுத்தப்படும் சுயவேலை வாய்ப்பு திட்டங்களின் கீழ் கடந்த நிதி ஆண்டில் 34 நிறுவனங்களுக்கு, ஒரு கோடியே 36 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு தொழில் தொடங்க உள்ளதாகவும் கூறினார்.

மேலும், முதலீட்டு மானியத் திட்டத்தின் கீழ் கடந்த நிதி ஆண்டில் 13 குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 2 கோடியே 78 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு தொழில்கள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், நறுமண பூக்களை பயன்படுத்தி வாசனை திரவிய தொழிற்சாலை தொடங்க முன்வரும் தனியார் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் வாங்கி தொழில் தொடங்க அரசு அனைத்து வகையான உதவிகளையும் வழங்கும் எனவும் தெரிவித்தார்.

அதேபோல், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைப்பது குறித்து தொழில்துறை அமைச்சருடன் கலந்தாலோசித்து, முதல் -அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com