

கருமத்தம்பட்டி:
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் உள்ளனர்.
இவர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு கேட்டும், அரசு அறிவித்த சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதமும் மற்ற ரகத்திற்கு 20 சதவீதமும் ஒப்பந்த கூலியை பிடித்தம் இல்லாமல் அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 9-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினர். ஆனாலும் அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், விசைத்தறி உரிமையாளர்கள் குடும்பத்துடன் போராடுவது, உண்ணாவிரதம் என பல்வேறு கட்ட போராட்டங்களை கையில் எடுத்து கடந்த 47 நாட்களுக்கும் மேலாக போராடி வருகிறார்கள்.
கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பல்லடம் காரணம் பேட்டை பகுதியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கூலி உயர்வு கேட்டு போராடி வரும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஆதரவாக சோமனூர், கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த வியாபாரிகள் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
அதன்படி இன்று காலை முதல் சோமனூர், கருமத்தம்பட்டி பஜார் பகுதிகளில் இருக்க கூடிய செல்போன் கடைகள், எலக்ட்ரிக் வாகன உதிரிபாக கடைகள், மளிகை கடைகள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. இதனால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் குறைந்துள்ளது. இன்று காலை தொடங்கிய போராட்டம் மாலை 6 மணி வரை நடக்க உள்ளது.
இதேபோல் கிட்டாம்பாளையம், சாமளாபுரம், தெக்கலூர், பருவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கடை உரிமையாளர்கள் கூறும்போது, விசைத்தறி உரிமையாளர்கள் பல நாட்களாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை கவனத்தில் எடுத்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு முதல்- அமைச்சருக்கு விசைத்தறியாளர்கள் அஞ்சல் அட்டை அனுப்பியுள்ளனர். எனவே அரசு இதனை கவனத்தில் எடுத்து உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அவர்களுக்கு ஆதரவாகவே இன்று ஒருநாள் கடைகளை அடைத்துள்ளதாக தெரிவித்தனர்.