சேலம் கோவில் அர்ச்சகர் சஸ்பெண்டு- அறநிைலயத்துறை பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

கோவில் தக்கார் மற்றும் கவுன்சிலருக்கும் தனிப்பட்ட முறையில் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி அனுமதி அளித்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சேலம்:

சேலம் அம்மாப்பேட்டை கிருஷ்ணாநகரில் சீதா ராமச்சந்திர மூர்த்தி கோவில் உள்ளது. இங்கு பணியாற்றிய கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது

கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு சம்பளம் தரப்படவில்லை. கோவிலுக்கு நிர்வாக அதிகாரி நியமிக்கப்படவில்லை. குறிப்பாக எந்த உத்தரவும் இன்றி கோவில் நிர்வாகத்தை தக்கார் மேற்கொள்கிறார். சேலம் மாநகராட்சி பெண் கவுன்சிலர் ஒருவர் கடந்த மாதம் 18ந் தேதி நைட்டி உடையுடன் கோவிலுக்கு வந்தார்.

பாரம்பரிய உடையில் மட்மே கோவிலுக்கு வர வேண்டும் என நான் எதிர்ப்பு தெரிவித்தேன், இதனால் ஆத்திரமடைந்த அவர் என்னை திட்டினார். தொடர்ந்து எனக்கு அச்சுறுத்தல் வரவே நான் மன உளைச்சல் அடைந்தேன், இது குறித்து சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டேன்.

தொடர்ந்து 27ந் தேதி கவுன்சிலரில் ஆதரவாளர்கள் கோவிலுக்கு வந்தனர். அதில் ஒருவர் என்னை தாக்கினார். கோவில் தக்கார் புனிதராஜ் இதனை பார்த்து அமைதியாக இருந்தார். பின்னர் கோவில் சாவியை என்னிடம் இருந்து பறித்து அவர்களுடன் வந்திருந்த மற்றொரு அர்ச்சகரிடம் கொடுத்தனர்.

இதையடுத்து என்னை சஸ்பெண்டு செய்து அறநிலையத்துறை உதவி ஆணையர் பெயரில் கோவில் தக்கார் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை பிறப்பிக்க உதவி ஆணையர் மற்றும் தக்காருக்கு அதிகாரம் இல்லை. நள்ளிரவில் கோவிலை திறந்ததாகவும், ஜாதி பாகுபாடு பார்ப்பதாகவும், பெண்களிடம் முறையாக நடந்து கொள்ளவில்லை என்றும் எனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

நேரம், தேதி, இடம் ஆகிய விவரங்கள் எதுவும் குற்றப்பத்திரிகையில் இல்லை. உள் நோக்கத்துடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே சஸ்பெண்டு உத்தரவு குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும், விசாரணை முடியும் வரை அதனை தடை செய்ய வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு பதில் அளிக்கும்படி அறநிலையத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும் கோவில் தக்கார் மற்றும் கவுன்சிலருக்கும் தனிப்பட்ட முறையில் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி அனுமதி அளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com