

கொடைக்கானல்:
கொடைக்கானலில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையில் கடும் உறைபனி பொழிவு காணப்படும். இந்நிலையில் கடந்த வருடம் பெய்த தொடர் மழையின் காரணமாக உறை பனி காலமானது தாமதமாக தொடங்கியது. மேலும் டிசம்பர் மாதம் இறுதி நாட்களில் உறை பனியானது சில நாட்கள் மட்டும் நிலவியது. அதன் பின் கடும் குளிர், சாரல் மழை மற்றும் மிதமான வெப்பம் நிலவி வந்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் இரவில் வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் வரை நிலவியதால் மலைப்பகுதி முழுவதும் குளிர் நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் 9 டிகிரி செல்சியசுக்கு குறைவாக வெப்ப நிலை காணப்பட்டு கடும் குளிர் நிலவியதால் பசுமை புற்களின் மேல் விழுந்த நீர்ப் பனித் துளிகள் உறைந்து உறைபனியாக மாறியது.
இந்த உறைபனியானது கொடைக்கானல் நீர்பிடிப்புப் பகுதியான கீழ்பூமி, பாம்பார்புரம், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் காணப்பட்டது. அந்தப் பகுதிகளில் உள்ள பசுமையான புற்களின் மேல் உறைபனி பொழிவு இருந்ததால் வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் காட்சியளித்தது.
கொடைக்கானலில் நிலவி வரும் உதற வைக்கும் கடும் உறை பனியினால் அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் இந்த அழகிய ரம்யமான காட்சியினை பார்த்து செல்கின்றனர். உறைபனி மற்றும் கடும் குளிர் காரணமாக சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் நிலவி வரும் குளிரை சமாளிக்க காலை வேளையில் தீ மூட்டி குளிர்காய்ந்து வருவதுடன் ஸ்வெட்டர், ஜர்க்கின் உள்ளிட்ட குளிருக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிந்து தங்களை காத்துக் கொள்கின்றனர். மேலும் பனியானது ஏரியில் ஆவியாக செல்லும் போது ரம்மியமாக காட்சியளிப்பதை நடைப்பயிற்சியில் ஈடுபடும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.