சுரண்டை அருகே டாஸ்மாக் கடையில் பீர்பாட்டிலுடன் ரகளை செய்த போலீஸ்காரர் கைது

சுரண்டை அருகே பணியின் போது சீருடையில் மதுக்கடைக்கு சென்று போதையில் தகராறு செய்த போலீஸ்காரர் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது.
போலீஸ் சீருடையில் பீர்பாட்டிலுடன் ரகளை செய்த போலீஸ்காரர்.
போலீஸ் சீருடையில் பீர்பாட்டிலுடன் ரகளை செய்த போலீஸ்காரர்.
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ராஜகுரு (வயது 34).

இவர் கடந்த 2011-ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தார். கடந்த 6 மாதங்களாக கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று சேர்ந்தமரத்தை அடுத்த திருமலாபுரத்தில் பணிக்காக சென்றிருந்தார். அப்போது சேர்ந்தமரம்- வீரசிகாமணி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அவர் போலீஸ் உடையுடன் சென்றுள்ளார்.

கடையில் மது கேட்டு தகராறு செய்த ராஜகுரு அங்கு நின்றவர்களை அவதூறாக பேசி உள்ளார். அவரை தடுத்த பார் ஊழியரையும் திட்டி உள்ளார். பின்னர் பீர்பாட்டிலுடன் கடை முன்பு ரகளையில் ஈடுபட்டுள்ளார். இவை அனைத்தையும் அந்த பகுதியில் நின்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினர்.

இதுகுறித்து பார் ஊழியரான ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை சேர்ந்த ராஜூ (52) சேர்ந்தமரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் வேல்பாண்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸ்காரர் ராஜகுருவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அவர் மீது அவதூறாக பேசுதல் (294-பி), கொலை மிரட்டல் விடுத்தல் (506/2) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதற்கிடையே, பணியின் போது சீருடையில் மதுக்கடைக்கு சென்று போதையில் தகராறு செய்த போலீஸ்காரர் ராஜகுருவின் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது.

இதுகுறித்து புளியங்குடி டி.எஸ்.பி. விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவிட்டார். அதன் பேரில் டி.எஸ்.பி.கணேஷ் விசாரணை நடத்தி வருகிறார். அவரது அறிக்கையின் அடிப்படையில் போலீஸ்காரர் ராஜகுரு ‘சஸ்பெண்டு’ செய்யப்படுவார் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com