

திருவள்ளூர்:
தமிழகத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் ‘ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0’ என்ற பெயரில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் கஞ்சா, குட்கா வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கஞ்சா கடத்தல், குட்கா விற்பனை குறித்து கண்காணிப்பும், தணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள 5 சோதனைச் சாவடிகளுடன் கூடுதலாக 15 சோதனைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கடந்த 28-ந் தேதி முதல் இதுவரை கஞ்சா, கடத்தல் தொடர்பாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 33 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சத்து 93 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
அதிகபட்சமாக திருத்தணியில் 80 கிலோவும், கவரப்பேட்டையில் 33 கிலோ கஞ்சாவும் சிக்கி இருக்கிறது. இதேபோல் குட்கா கடத்தல் தொடர்பாக 115 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 670 மதிப்புள்ள குட்கா சிக்கி இருக்கிறது.
இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் வகையிலும் கஞ்சா கும்பலை கூண்டோடு பிடிக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதன்படி கஞ்சாவை ஒழிக்க உதவுபவர்கள் தன்னுடன் ‘டீ’ குடிக்கலாம் என்று தெரிவித்து இருக்கிறார். மேலும் கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:
மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்து ரகசிய தகவல் தெரிவிக்க வழங்கப்பட்டுள்ள 63799-04848 என்ற எண்ணுக்கு கஞ்சா கடத்தல், குட்கா கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
இந்த தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க விரும்பாதவர்கள் வாட்ஸ்-அப் மூலம் கஞ்சா, குட்கா விற்பனை செய்யும் இடம், மற்றும் குற்றவாளிகள் குறித்து தகவல் அனுப்பலாம்.
தகவல் தெரிவிப்பவர்களின் அடையாளம் ரகசியம் காக்கப்படும். தகவலின் அடிப்படையில் 10 கிலோ மற்றும் அதற்கு மேல் கஞ்சா கைப்பற்றப்பட்டால் 10 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும். இது காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும்.
கல்லூரி வளாகம், பள்ளி வளாகம் மற்றும் இதர கல்வி ஸ்தாபனங்களில் கஞ்சாவை அறவே ஒழிக்க உதவிடுவோர் போலீஸ் சூப்பிரண்டுடன் உடன் தேநீர் அருந்த அழைப்பு விடுக்கப்பட்டு உரிய மரியாதையுடன் தேநீர் அளித்து சன்மானம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.
மேலும் அவர்கள் பெயர், புகைப்படம் மற்றும் இதர அடையாளங்கள் ரகசியமாக இருக்கும். ‘இளைய சமுதாயத்தை மற்றும் வருங்கால தமிழகத்தை காக்க உதவிடுங்கள்’. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரின் இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் இந்த நடவடிக் கைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.