குமரியில் மழை நீடிப்பு- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 39.31 அடியாக உள்ளது. அணைக்கு 314 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மழை
மழை
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று காலையில் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்துக்கு பிறகு சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது.

இடிச் சத்தம் காதைப் பிளக்கும் வகையில் இருந்தது. மின்னல்கள் கண்ணை பறிக்கும் வகையில் இருந்தன. இந்த நிலையில் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

நாகர்கோவில், பூதப்பாண்டி, சுருளோடு, தக்கலை, ஆணைக்கிடங்கு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. பூதப்பாண்டியில் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக பூதப்பாண்டியில் லேபர் காலனிக்கு செல்லும் தரை பாலத்தை மழை வெள்ளம் இழுத்துச் சென்றது. இதனால் பொதுமக்கள் பரிதவிப்பில் ஆளானார்கள்.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டித்தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 69.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்ததையடுத்து அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 39.31 அடியாக உள்ளது. அணைக்கு 314 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 34.05 அடியாக உயர்ந்தது. அணைக்கு 889 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 9.41 அடியாகவும் சிற்றார்-2 அணை நீர்மட்டம் 9.51 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 19.20 அடியாகவும் மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 6.76 அடியாகவும் உள்ளது.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 10.20 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசி வருகிறது. திற்பரப்பிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பெருஞ்சாணி-18.4, பாலமோர்-69.6, சிற்றாறு-2-7.4, புத்தன் அணை-19.6, மாம்பழத்துறையாறு-21, குருந்தன்கோடு-10.8, பூதப்பாண்டி-10.6, முக்கடல்- 27.8.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com