

தருமபுரி:
தருமபுரி மாவட்டம் காரி மங்கலம் ஒன்றியம் சொர்ணம்பட்டியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக அதே பகுதியைச் சேர்ந்த கிரிஜா (வயது 35) என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் முட்டை குறைவாக இருப்பதாக கிரிஜா, பள்ளி தலைமையாசிரியர் சாந்தியிடம் தெரிவித்தார்.
இதில் கோபம் அடைந்த தலைமையாசிரியர் சாந்தி கிரிஜாவை திட்டியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கிரிஜா நேற்று மதியம் சத்துணவு அறையைப் பூட்டிக் கொண்டு தனது செல்போனில் அழுதுகொண்டே வீடியோ பதிவிட்டு கொண்டு ஒரு பாட்டில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அந்த வீடியோ பதிவை வாட்ஸ் அப் மூலம் வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோ பதிவில் கிரிஜா கூறியிருப்பதாவது :-
நான் சத்துணவு அமைப்பாளராக வேலைபார்த்து வருகிறேன். என்னை எல்லோரும் டார்ச்சர் செய்றாங்க. ரொம்ப அவமானப்படுத்துகிறார்கள். என் கைப்படவே லெட்டர் எழுதி வாங்கிக்கொண்டார்கள். என் மேல்தான் தப்பு என்று பேப்பரில் எழுதி வாங்கி விட்டார்கள். என்னால முடியல. எஸ்.பி சார் என் குழந்தையை என் அம்மாக்கிட்ட விட்டுடுங்க. அவங்க தான் என் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அப்போது அழுதுகொண்டே ஒரு பாட்டில் தூக்க மாத்திரைகளையும் கையில் கொட்டி வாயில் போட்டு தண்ணீர் குடித்தார்.
இந்த காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி வந்ததால் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே கிரிஜா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தலைமையாசிரியர் சாந்தி மற்றும் ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரு பாட்டில் தூக்க மாத்திரைகளை தின்று சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தர்மபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.