மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்ற நித்யானந்தா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுரம் அருகே நித்யானந்தாவின் சியாமளா பீடம் ஆசிரமம் இயங்கி வருகிறது.
நித்யானந்தா
நித்யானந்தா
Published on

திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்தவர் நித்யானந்தா. இவர் நித்யானந்தா தியான பீடம் வாயிலாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் ஆன்மீக சொற்பொழிவு சத்சங்கம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவருக்கு திரளான ஆதரவாளர்கள் உள்ளனர்.

இதற்கிடையே மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு தமிழகத்தின் சைவ மடங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. நித்யானந்தாவின் இளைய மடாதிபதி பதவி பறிக்கப்பட்டது. ஆனாலும் “நான் வகித்து வரும் மதுரை ஆதீன இளைய மடாதிபதி பதவி சட்டபூர்வமாக பாதிக்கப்படவில்லை. எனவே நானே மதுரை ஆதீனம் இளைய மடாதிபதி” என்று பகிரங்கமாக அறிவித்தார்.

நித்யானந்தா மீது பல்வேறு வழக்குகள் பாய்ந்தன. அவர் வழக்கு விசாரணைக்காக பல்வேறு இடங்களுக்கும் அலைய வேண்டி வந்தது. இந்தநிலையில் நித்யானந்தா 100-க்கும் மேற்பட்ட சீடர்களோடு திடீரென மாயமானார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. போலீசாரும் தேடி வந்தனர்.

இந்தநிலையில் நித்யானந்தா தொலைக்காட்சியில் தோன்றி, “நான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அதிபராக உள்ளேன். அங்கு இருந்தபடி உலகம் முழுவதும் ஆன்மீக சொற்பொழிவு சத்சங்கம் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவேன்” என்று அறிவித்தார்.

அதன்படி இணையதள நேரலை வாயிலாக ஆன்மீக சொற்பொழிவு சத்சங்கம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மதுரை ஆதீனம் சில மாதங்களுக்கு முன்பு காலமானார். அப்போது “நானே மதுரையின் 293-வது மடாதிபதி” என்று நித்யானந்தா அறிவித்து, கைலாசாவில் பதவி பிரமாணமும் எடுத்துக் கொண்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா அறிவிப்பு வெளியானது முதல் கைலாச நாட்டில் ஆன்மீக நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன.

“நானே பரமேசுவரனின் அவதாரம், மீனாட்சி அம்மனின் மறுபிறவி” என்று நித்யானந்தா அடிக்கடி குறிப்பிடுவார். அதனை நினைவுகூரும் வகையில் பக்தர்கள் மீனாட்சி அம்மனின் வடிவில் நித்யானந்தாவை ஸ்தாபித்து வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோலத்தில் நித்யானந்தா இருப்பது போன்ற படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுரம் அருகே நித்யானந்தாவின் சியாமளா பீடம் ஆசிரமம் இயங்கி வருகிறது. இங்கு சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

இங்கு நித்யானந்தா கைலாச நாட்டில் இருந்தபடி சித்திரை திருவிழாவை நேரடியாக பார்க்க வசதியாக, நேரலை வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. “நான் சித்திரை திருவிழாவில் பங்கேற்று உள்ளதை பொதுமக்கள் பார்வைக்கு நேரடியாக கொண்டு செல்ல வேண்டும்” என்று நித்யானந்தா அறிவுறுத்தி உள்ளார்.

ஆசிரம வளாகத்தில் பிரத்தியேக கணினி திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சொக்கநாதர் கயிலாய வாகனத்திலும், மீனாட்சி காமதேனு வாகனத்திலும் மாசி வீதிகளில் வலம் வந்தனர். அப்போது சியாமளா பீடம் ஆசிரமம் சார்பில் அம்மனுக்கும், சுவாமிக்கும் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பட்டாடைகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நித்யானந்தா இணையதள நேரலை வாயிலாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரரை தரிசித்தார். அதன் பிறகு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார். தொடர்ந்து நித்யானந்தா உத்தரவின்படி ஆசிரமம் சார்பில் அறுசுவை உணவுகள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. அவற்றை வாங்குவதற்காக பெண் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com