

மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடந்து வருகிறது. மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் தினந்தோறும் விதவிதமான அலங்காரங்களில் பல்வேறு வாகனங்கள் மற்றும் பல்லக்குகளில் வீதி உலா வருகிறார்கள்.
2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் பங்கேற்புடன் சித்திரைத்திருவிழா நடந்து வருகிறது. இதனால் தினந்தோறும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் நித்யானந்தா சில நாட்களுக்கு முன்பு இணையதள நேரலை வாயிலாக சித்திரை திருவிழாவை கண்டுகளித்தார்.
இதனைத் தொடர்ந்து கைலாசாவின் அதிகாரபூர்வ இணையதளங்களில் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் மதுரையின் சாயல் போன்று கைலாசாவில் மீனாட்சி அம்மன் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு அம்மன், சுவாமி சிலைகள் நிறுவப்பட்டு தினந்தோறும் பூஜை, புனஸ்காரங்கள் நடக்கின்றன.
நித்யானந்தாவின் அதிகாரபூர்வ யூடியூப் இணையதள நேரலையில் இந்த வழிபாடுகள் இடையிடையே ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. கைலாசா கோவிலின் நடக்கும் நித்ய பூஜைகளை பக்தர்கள் அறியும் வகையில் யூடியூப் சேனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு “கைலாசா மதுரை” என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதில் பணம் செலுத்தி உறுப்பினரானால் மட்டுமே கருத்துகளை பகிர முடியும். சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளையும் நேரடியாக கண்டுகளிக்க முடியும். இதற்காக கைலாசா நிர்வாகம் 3 விதமான கட்டணங்களில் பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்து வருகிறது.
கைலாசா நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாதிரி சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் வழிபாட்டை நித்யானந்தா நேரடியாக நடத்தி வருகிறார்.
மதுரையின் சாயலை கொண்டுவந்து கைலாசா நாட்டில் சித்திரை திருவிழா கொண்டாடும் நித்யானந்தாவின் செயல்பாடுகள், நாடு முழுவதிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளன.
இதையும் படியுங்கள்...திருவண்ணாமலைக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 6,000 சிறப்பு பஸ்கள் இயக்கம்