திருமணமான 3-வது நாளில் புதுப்பெண் திடீர் தற்கொலை: காதல் தோல்வியா? என போலீசார் விசாரணை

திருமணம் நடைபெற்று 3-வது நாளிலேயே மணப்பெண் தற்கொலை செய்து கொண்டிருப்பதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருவீட்டாரின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருமணமான 3-வது நாளில் புதுப்பெண் திடீர் தற்கொலை: காதல் தோல்வியா? என போலீசார் விசாரணை
Published on

திருச்சி:

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 31). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், திருச்சி தாளக்குடி மகாலட்சுமி நகர் டேவிட் என்பவரின் மகள் ரெஸ்பாகா (25) என்பவருக்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து மறுவீடு அழைப்பிற்காக பெண்ணின் வீட்டிற்கு புதுமண தம்பதியினர் அழைத்து செல்லப்பட்டனர். பெற்றோர் வீட்டுக்கு செல்லும் ஆர்வத்தில் இருந்தார்.

அங்கு தடபுடல் விருந்து நடைபெற்றது. விருந்திற்கு பின்னர் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து கொண்டு மாப்பிள்ளை வீட்டார் காரில் புறப்பட்டு உள்ளனர். ஆசையுடன் வளர்த்த மகளை ஆனந்த கண்ணீருடன் பெண் வீட்டார் வழி அனுப்பி வைத்துள்ளனர்.

புது மாப்பிள்ளை, புது வாழ்வு, புது கனவுகளுடன் தனது கணவரின் அருகில் அமர்ந்து சந்தோஷமாக பயணித்துள்ளார். ஆனால் இந்த சந்தோஷ பயணம் வெகு நேரம் நீடிக்கவில்லை.

ஸ்ரீரங்கம் பகுதியில் பைபாஸ் ரோட்டில் கார் சென்று கொண்டிருந்த போது புது மணப்பெண் ரெஸ்பாகா திடீரென்று மயங்கி, ஸ்டீபன் மீது சாய்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு காரை கொண்டு சென்று உள்ளனர்.

திருவானைக்காவல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு ரெஸ்பாகாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்த புதுமாப்பிள்ளையும், அவரது வீட்டாரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். பின்னர் ஸ்டீபன் இது குறித்து மணப்பெண் வீட்டிற்கு தகவல் அளித்தார். அங்கு வந்த மணப்பெண் வீட்டார் கதறி துடித்தனர்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அங்கு வந்த கொள்ளிடம் போலீசார் புதுப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மறுவீடு அழைப்பு விருந்திற்கு முன்னதாகவே ரெஸ்பாகா விஷம் அருந்தி இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

விரும்பாத திருமணமா அல்லது ஏதேனும் காதல் தோல்வியா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடைபெற்று 3-வது நாளிலேயே மணப்பெண் தற்கொலை செய்து கொண்டிருப்பதால், இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.

புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருவீட்டாரின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com