தூத்துக்குடியில் திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் குத்திக்கொலை- கணவர் வெறிச்செயல்

தூத்துக்குடியில் திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண்ணை அவரது கணவர் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கணவர் பொன்ராஜூடன் மாரிசெல்வி (திருமணத்தின் போது எடுத்தபடம்)
கணவர் பொன்ராஜூடன் மாரிசெல்வி (திருமணத்தின் போது எடுத்தபடம்)
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் பொன்ராஜ்(வயது 24). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தாளமுத்து நகர் பகுதியில் உள்ள பாலதண்டாயுத நகரை சேர்ந்த மாரிசெல்விக்கும்(19) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

மாரிசெல்வி அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

உடனே பொன்ராஜின் தாயார், மாரிசெல்வியை சிறிது நாட்கள் அவரது பெற்றோர் வீட்டில் சென்று இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனால் மாரிசெல்வி கடந்த 10 நாட்களாக தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

நேற்று இரவு மனைவியை குடும்பம் நடத்த வருமாறு சமாதானம் பேசி அழைத்து வருவதற்கு பொன்ராஜ் புறப்பட்டு சென்றுள்ளார். அவரது நண்பர்களான அண்ணாநகரை சேர்ந்த மந்திரமூர்த்தி(22), சுந்தரவேல்புரத்தை சேர்ந்த முத்துகுமார் ஆகிய 2 பேரையும் உடன் அழைத்துக்கொண்டு மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு குடும்பம் நடத்த அழைத்தபோது கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பொன்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரிசெல்வியின் தலையில் வெட்டினார்.

பின்னர் அவரது உடலிலும் சரமாரியாக குத்தினார். இதனை தடுக்க வந்த அவரது தாயார் மாரியம்மாளுக்கும் கத்தியால் வெட்டு விழுந்தது.

உடனே அங்கிருந்து பொன்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் தப்பி சென்றுவிட்டனர். இதற்கிடையே கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மாரிசெல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிசெல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் காயம் அடைந்த மாரியம்மாளை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பொன்ராஜ் மற்றும் அவரது நண்பர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண்ணை அவரது கணவர் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com