

மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி புதுக்காலனியைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 27). அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (28). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இவர்கள் மோட்டார் சைக்கிளில் மேலும் சில நண்பர்களுடன் மூணாறு சென்று விட்டு போடிக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
முந்தல் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற மாட்டு வண்டியை கவனிக்காமல் அவர்கள் பின்னால் மோதினர். இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதை பார்த்ததும் பின்னால் வந்து கொண்டு இருந்த அவர்களது நண்பர்கள் பிரதீப்குமார் மற்றும் பிரபாகரனை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து போடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறுகலான சாலையில் அதிக அளவு வைக்கோல் போர் ஏற்றி வந்ததால் இந்த விபத்து நடந்தது என போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இச்சம்பவம் போடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.