

சேலம்:
சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் மாம்பழம் தான். இந்த மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
குறிப்பாக மார்ச் மாதம் தொடங்கி 6 மாத காலம் சேலம் மார்க்கெட்டுகள் மற்றும் சாலையோரங்களில் எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருக்கும்.
சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், வரகம்பாடி, அடிமலைப்புதூர், வாழப்பாடி, ஆத்தூர், நங்கவள்ளி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேச்சேரி ஆகிய பகுதிகளிலும், இதுதவிர தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிக அளவில் மாமரங்கள் உள்ளன.
சேலம் மல்கோவா, செந்தூரா, பெங்களூரா, அல்போன்சா, இமாம்பசந்த், நடுசாலை, பங்கனப்பள்ளி ஆகிய ரகங்கள் அதிக அளவில் விளைகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் மாம்பழங்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
நடப்பாண்டில் கடந்த டிசம்பர், ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையால் மாமரங்கள் பூப்பூப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் சற்று தாமதமாக கிளிமூக்கு மாங்காய் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த வகை மாங்காய்கள் பெரும்பாலும் மாங்காய் சாதம், ஊறுகாய் செய்யவும், கம்மங்கூழ் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.
இனி வரும் நாட்களில் மற்ற மாங்காய்களின் வரத்தும் படிப்படியாக அதிகரிக்கும். கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பரவலால் மாம்பழ வியாபாரம் பாதித்த நிலையில் இந்தாண்டு மாம்பழ வியாபாரம் அதிகரிக்கும் என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ சீசன் தொடக்கத்தில் கிளிமூக்கு மாங்காய் அதிக அளவில் விற்பனைக்கு வரும். அதே போல சீசன் முடியும்போது பழுத்த கிளிமூக்கு மாங்காய் அதிக அளவில் விற்பனைக்கு வரும்.
தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் வியாபாரிகள் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மாந்தோப்புகளில் முகாமிட்டு மாங்காய்கள் பறித்து தோட்டத்தில் வைத்தே அட்டை பெட்டிகளில் வைத்து லாரிகளில் லோடு லோடாக வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதைத்தவிர மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு மாங்காய்கள் ஏற்றுமதி செய்யும் பணியும் நடக்கிறது.
சேலம் உள்பட 4 மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 டன் வரை மாங்காய் விற்பனைக்கு வருகிறது. இங்கு விற்பனைக்கு வரும் மாங்காய்களை தள்ளுவண்டி வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், கூடை வியாபாரிகள் வாங்கி சென்று சில்லரை வியாபாரம் செய்து வருகிறார்கள். ஒரு கிலோ 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த மாதம் முதல் மற்ற தர மாங்காய்கள் அனைத்தும் விற்பனைக்கு வரும், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் விற்பனை பாதித்த நிலையில் இந்தாண்டு மாம்பழம் விளைச்சல் அதிகரித்து விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.