காதல் திருமணம் செய்த 4வது நாளில் தம்பதி கடத்தல்- தி.மு.க. பிரமுகர் மீது வழக்குப்பதிவு

காதல் திருமணம் செய்த 4-வது நாளில் மரக்காணம் அருகே தம்பதி கடத்தப்பட்டனர். இது தொடர்பாக தி.மு.க. பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாலட்சுமி-தாமரைக்கண்ணன்
மகாலட்சுமி-தாமரைக்கண்ணன்
Published on

கடலூர்:

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பாச்சாரப்பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் தனஞ்செயன். இவரது மனைவி பாக்கியம்(வயது 48). இவர், தனது உறவினர்களுடன் நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனை சந்தித்து ஒரு மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது மகன் தாமரைக்கண்ணன்(23), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரும், எங்கள் ஊரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் அருள்முருகனின் மகள் மகாலட்சுமி(20) என்பவரும் காதலித்து வந்தனர். மகாலட்சுமி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார். இருவரும் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர். மேலும் பாதுகாப்பு கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் சென்னையில் உள்ள பா.ஜ.க. பிரமுகரிடம் தஞ்சம் அடைந்தனர். பின்னர் எனது மகனும், மருமகளும் சென்னையில் இருந்து காரில் நேற்று முன்தினம் இரவு பாச்சாரப்பாளையத்துக்கு புறப்பட்டனர்.

மரக்காணம் அருகே வந்தபோது அருள்முருகன் மற்றும் சிலர் அவர்களை மறித்து இருவரையும் காரில் கடத்திச்சென்று விட்டனர். ஆகவே அவர்கள் 2 பேரையும் மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தனஞ்செயன், வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அருள்முருகன் மற்றும் சிலர் மீது வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com