தஞ்சையில் சாலையோரம் அமர்ந்து மது குடித்தபோது லாரி மோதியதில் 3 பேர் பலி

தஞ்சையில் இன்று அதிகாலையில் சாலையோரம் அமர்ந்து மது குடித்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து
விபத்து
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே உள்ள நாட்டாணியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 41). காண்டிராக்டர் வேலை செய்து வந்தார். மருங்கையை சேர்ந்த சுதாகர் (27), அசூரமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் (32). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

இந்த நிலையில் இன்று அதிகாலை ஒரு காரில் பிரசாத், சுதாகர் மற்றும் மோட்டார் சைக்கிளில் சந்திரசேகர் ஆகியோர் புறப்பட்டு தஞ்சை அடுத்த கடகடப்பை பகுதியில் புதிதாக போடப்பட்டு வரும் கும்பகோணம் பைபாஸ் சாலைக்கு சென்றனர். பின்னர் அங்கு சாலையோரம் கார், மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்டர் மீடியனில் 3 பேரும் அமர்ந்து மது குடித்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பிரசாத், சுதாகர், சந்திரசேகர் ஆகிய 3 பேர் மீது மோதியதோடு மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் மீதும் மோதி நின்றது.

இந்த கோர விபத்தில் பிரசாத், சுதாகர், சந்திரசேகர் ஆகியோர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். கார், மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்தது. டிரைவர் லாரியை விட்டு விட்டு தப்பி சென்று விட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் பலியான 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com