கொடநாடு வழக்கு விசாரணை பிப்ரவரி 9-க்கு ஒத்திவைப்பு

கோத்தகிரி போலீசார் 10 பேரை கைது செய்தனர்.வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
கொடநாடு வழக்கு விசாரணை பிப்ரவரி 9-க்கு ஒத்திவைப்பு
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

இன்று இந்த வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது சயான், வாளையார் மனோஜ், உதயகுமார் ஆகிய 3 பேர் ஆஜராகி இருந்தனர்.

அப்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிஜின்குட்டி, திபு உள்ளிட்டோரின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால், கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை பிப்ரவரி 9-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆகியோரின் செல்போன், வாட்ஸ் அப் உரையாடல்களை ஆய்வு செய்வதற்காக சி.பி.சி.ஐ.டி போலீசார் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்குள்ள ஆய்வகத்தில் இவர்களின் பேச்சுக்கள், உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து, அதில் கிடைக்கப்பெறும் தகவல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் டி.எஸ்.பி.மாதவன் தலைமையிலான போலீசார் அகமதாபாத்திலேயே முகாமிட்டுள்ளனர்.

இந்த உரையாடல்களில் பேசப்பட்டது என்ன என்பது தெரியவரும் பட்சத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com