காசிமேடு மார்க்கெட்டில் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு குவிந்தது- விலை குறைவால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி

ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்த சுமார் 300 விசைப்படகுகள் கரை திரும்பின. காசிமேடு மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருந்ததால் களை கட்டி இருந்தது.
காசிமேடு மார்க்கெட்டில் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு குவிந்தது- விலை குறைவால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி
Published on

ராயபுரம்:

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1,200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன்பிடி தடை காலம் அமலில் இருந்தது. 61 நாட்கள் தடைகாலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த 14-ந் தேதி இரவு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

கடந்த வாரம் தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக் கிழமையில் குறைந்த அளவு விசைப்படகுகள் மட்டுமே கரை திரும்பின. இதனால் எதிர்பார்த்த அளவு பெரிய மீன் வரத்து இல்லை. மீன்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகு கரைதிரும்புவது வழக்கம். எனவே தடை காலம் முடிந்து 2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று பெரிய அளவிலான மீன்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி இன்று அதிகாலை ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்த சுமார் 300 விசைப்படகுகள் கரை திரும்பின. கடந்த வாரத்தை விட பெரிய அளவிலான மீன்கள் அதிக அளவு சிக்கி இருந்ததால் அவை விற்பனைக்காக குவிந்து இருந்தது.

இதையடுத்து இன்று அதிகாலை முதலே காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வாங்க வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக அளவில் குவிந்தனர். மேலும் கடந்தவாரத்தை விட மீன்களின் விலை குறைவாகவே இருந்ததால் மீன் பிரியர்கள் போட்டி போட்டு பெரிய வகை மீன்களை வாங்கிச்சென்றனர்.

கடந்த வாரம் கிலோ ரூ.1400 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.1100-க்கு விற்கப்பட்டது.இதேபோல் ரூ.800-க்கு விற்கப்பட்ட வவ்வால் தற்போது ரூ. 550-க்கும், ரூ. 600-க்கு விற்ற பெரிய வகைசங்கரா ரூ. 400-க்கும் விற்கப்பட்டது.

காசிமேடு மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருந்ததால் களை கட்டி இருந்தது. மீன் விற்பனை ஜோராக நடைபெற்றது. இதனால் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது குறித்து மீன்வியா பாரிகள் கூறும்போது, கடந்த இரண்டு மாதங்களாக மீன்பிடி தடை காலத்தில் வாழ்வாதாரமின்றி தவித்த எங்களுக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை மீன் விற்பனை மகிழ்ச்சியை கொடுத்தது. பெரிய வகை மீன்கள் அதிகளவு கிடைத்து இருந்தது. மீன்களின் விலையும் குறைந்து இருந்ததால் பொதுமக்களும் வியாபாரிகளும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். வரும் நாட்களிலும் இதே நிலை நீடிக்கும் என்றனர்.

காசிமேடு மார்க்கெட்டில் மீன்களின் விலை விபரம் (கிலோவில்) வருமாறு:-

வஞ்சிரம்- ரூ.1100, பர்லா - ரூ.380, சங்கரா-ரூ.400, தோல் பாறை -ரூ.300, தேங்காய் பாறை -ரூ.700, கடம்பா- ரூ.280, நெத்திலி- ரூ.100

வெள்ளை ஊடான்-ரூ.100, இறால், ரூ.350நண்டு-ரூ.300.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com