கவுந்தப்பாடியில் மோசடி செய்து ரூ.42 லட்சத்தை சுருட்டிய நகை மதிப்பீட்டாளர் கைது

வங்கி நிர்வாகித்தனர் நகைகளை ஆய்வு செய்த போது 10 பேரிடம் இருந்து பெறப்பட்ட நகைகள் அனைத்தும் போலி நகைகள் என தெரிய வந்தது.நகை மதிப்பீட்டாளர், போலி நகைகள் வைத்து பண மோசடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கவுந்தப்பாடியில் மோசடி செய்து ரூ.42 லட்சத்தை சுருட்டிய நகை மதிப்பீட்டாளர் கைது
Published on

கவுந்தப்பாடி:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி-ஈரோடு ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக கோபி காளியண்ணன் தெருவை சேர்ந்த அங்கமுத்து (36) என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அங்கமுத்து கடந்த வருடம் அவருக்கு தெரிந்த 10 நபர்களை வரவழைத்து தனக்கு குடும்ப கஷ்டம் இருப்பதாகவும், அதனால் பணம் தேவைப்படுவதாகவும், என்னிடம் தனித்தனியாக நகைகள் உள்ளது. எனது பெயரில் வங்கியில் வைக்க முடியாது. எனவே உங்கள் கணக்கில் நகைகளை வைத்து பணத்தை எடுத்து கொடுக்க சொல்லி உள்ளார்.

அதன்படி அந்த 10பேரும் அங்கமுத்துவிடம் நகைகளை வாங்கி அதனை மீண்டும் வங்கியில் அடமானம் வைப்பது போல் வைத்து பணத்தை வாங்கி அவரிடமே கொடுத்துள்ளனர். நகை மதிப்பீட்டாளராக இருந்த அங்கமுத்து அந்த நகைகளை அவர்கள் பெயரில் கணக்கு வைத்து பணத்தையும் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் அங்கமுத்து கடந்த நவம்பர் மாதம் 25-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 5-ந் தேதி வரை உடல்நலம் சரி இல்லை என்று கூறி விடுப்பு எடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் அலுவலகத்திற்கு வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த வங்கி நிர்வாகித்தனர் நகைகளை ஆய்வு செய்த போது 10 பேரிடம் இருந்து பெறப்பட்ட நகைகள் அனைத்தும் போலி நகைகள் என தெரிய வந்தது.

இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்த போது எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும், அங்கமுத்து தான் நகைகளை கொடுத்து அடமானம் வைத்து பணம் பெற்று கொண்டார் என்றும் கூறினர். அங்கமுத்து ரூ. 41 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.

இதனையடுத்து வங்கியின் துணை மேலாளர் இதுகுறித்து கவுந்தபாடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அங்கமுத்துவை தேடி வந்தனர்.

இந்நிலையில் அங்கமுத்துவை கவுந்தப்பாடி போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை மதிப்பீட்டாளர், போலி நகைகள் வைத்து பண மோசடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com