கோடை வெயில் அதிகரிப்பால் சின்னம்மை பரவும் அபாயம்

பலவீனமானவர்கள் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும், கோடை காலத்தில் சின்னம்மைக்கு ஆளாகக் கூடும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.ஆண்டுதோறும் கோடை காலத்தில் சின்னம்மை பாதிப்பு அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான்.
கோடை வெயில் அதிகரிப்பால் சின்னம்மை பரவும் அபாயம்
Published on

சென்னை:

'வேரிசல்லா' என்ற வைரஸ் மூலம் பரவக் கூடியது சின்னம்மை நோய். இதன் தாக்கம் கோடை காலத்தில் அதிகமாக இருக்கும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

கோடை காலத்தில் சீதோஷ்ண நிலை அதிகரிக்கும் போது குப்பை, குவியல்களில் இருந்து வைரஸ்கள் உருவாகி காற்றில் கலந்து பரவும். அதில் ஒரு வகையான வைரஸ்தான் வேரிசல்லா.

அசுத்தமான சூழலுக்கு நடுவே வசிப்பவர்களுக்கும், நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களுக்கும் வேரிசல்லா வைரஸ் மூலம் சின்னம்மை பரவக்கூடும். அவர்களது எச்சில் மூலம் பிறருக்கும் அது பரவலாம்.

அதை சரிவர கவனிக்காமல் விட்டாலோ அல்லது சிகிச்சை பெறாவிட்டாலோ நிமோனியா, மூளைக் காய்ச்சல், சிறுநீரக அழற்சி போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படக்கூடும். சின்னம்மைக்கு தடுப்பூசிகள் உள்ளது என்ற போதிலும், அத்தகைய தடுப்பு மருந்துகள் மூலமாக அந்நோயை முழுமையாகத் தடுக்க முடியாது என்கின்றனர் மருத்துவர்கள்.

பலவீனமானவர்கள் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும், கோடை காலத்தில் சின்னம்மைக்கு ஆளாகக் கூடும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சின்னம்மை பாதிப்பு தமிழகத்தின் சில இடங்களில் பதிவாகி இருப்பதாகத் தெரிகிறது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கோடை வெயில் தீவிரம் அடைந்துள்ள நிலையில், சின்னம்மை போன்ற பருவ கால நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மாநில பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

போதிய அளவில் மருந்துகளை இருப்பில் வைக்க வேண்டும். தேவைப்பட்டால் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்பி கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:-

ஆண்டுதோறும் கோடை காலத்தில் சின்னம்மை பாதிப்பு அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான். அதை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சின்னம்மைக்கான 'ஏசைக்ளோவிர்' மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்படும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு சின்னம்மை பரவாமல் தடுப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com