டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியர்களை அரிவாளால் வெட்டிய கும்பல்

கடையில் இருந்த பால்துரை, பாலமுருகன் ஆகியோரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியர்களை அரிவாளால் வெட்டிய கும்பல்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே வன்னிகோனேந்தலில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் சூப்பர் வைசராக தேவர்குளத்தை சேர்ந்த நபர் ஒருவர் உள்ளார்.

நேற்று இரவு அவர் சீக்கிரமாகவே வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கடை ஊழியர்களான வடக்கு பனவடலி சத்திரத்தை சேர்ந்த பால்துரை (வயது 40), வன்னிகோனேந்தலை சேர்ந்த பாலமுருகன்(57) ஆகியோர் கடையில் விற்பனையை பார்த்து கொண்டிருந்தனர்.

இந்நி லையில் இரவு சுமார் 9.45 மணியளவில் கடைக்கு மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர். அவர்கள் கடையில் இருந்த பால்துரை, பாலமுருகன் ஆகியோரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் கடை ஊழியர்கள் 2 பேரையும் வெட்டியது. உடனே 2 பேரும் வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிடவே, அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனை கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இதுகுறித்து தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த பாலமுருகன், கையில் வெட்டுபட்ட பால்துரை ஆகியோரை போலீசார் மீட்டு நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த கடை கழுகுமலை சாலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளது. அதில் பொருத்தப்பட்டி ருந்த சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து வெட்டியது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கும்பல் டாஸ்மாக் கடையில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க வந்ததா? அல்லது முன்விரோதம் காரணமாக கடை ஊழியர்களை கொலை செய்ய வந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com