தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை:

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது. கடந்த மாதம் 17, 18-ந்தேதிகளில் தென் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து பேரிழப்பை ஏற்படுத்தியது.

2 வாரம் கடந்த போது கூட இன்னும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. வீடுகளில் வெள்ளம் வடிந்த பாடில்லை. தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை 5 நாட்களுக்கு பெய்யும். தமிழகத்தில் இன்று (5-ந்தேதி) முதல் 9-ந்தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தேனி, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

மேலும் 7-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

9-ந்தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்து உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com